சென்னையில் நாளை அபூர்வமாக நீல நிலவு காட்சி; 2½ ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு


சென்னையில் நாளை அபூர்வமாக நீல நிலவு காட்சி; 2½ ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு
x
தினத்தந்தி 29 Aug 2023 8:00 PM GMT (Updated: 30 Aug 2023 6:31 AM GMT)

'புளு மூன்' என்ற நீல நிலவு சென்னையில் நாளை (வியாழக்கிழமை) இரவு தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவித்து உள்ளது.

நிலவின் சுழற்சி

நிலவினுடைய சுழற்சி முறை. நிலவினுடைய சுழற்சி காலம் 29.5 நாட்கள். ஒவ்வொரு 29.5 நாட்களுக்கு ஒருமுறை சூரியன்-பூமி-நிலா ஒரே நேர் கோட்டில் வந்து கொண்டே இருக்கும். அதன்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை முழு நிலவு தோன்றும். வருடத்திற்கு 12 முறை முழு நிலவைப் பார்க்கலாம். நிலவின் சுழற்சி கால அடிப்படையில் பார்த்தால், ஒரு வருடத்தின் 12 சுழற்சிக்கு பின்னர் 11 நாட்கள் மீதமிருக்கும். இந்த மீதமிருக்கும் நாட்கள் சேர்ந்து ஒவ்வொரு 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீல நிலவு நிகழ்வு நடைபெறும். அதுவும் 31 நாட்கள் உள்ள மாதங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் வானில் ஏற்படும் அரிய நிகழ்வான 'நீல நிலவு' (புளு மூன்) எனப்படும் நீல நிலவு நாளை (வியாழக்கிழமை) தோன்ற உள்ளது.

வீட்டில் இருந்தபடியே...

இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் கூறும்போது, 'ஒரு மாதத்தில் 2 முறை முழு நிலவு வந்தால் அதனை நீல நிலா (புளு மூன்) என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் நீல நிலா வருவதுண்டு. பொதுவாக வெளிநாடுகளில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் நீல நிலவுக்கு பெயர் வைத்து உள்ளனர். அந்தவகையில், ஜனவரி மாதம் வரும் நீல நிலவுக்கு 'ஓநாய்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அதேபோல் நம் நாட்டிலும் வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா என்று எல்லாம் பெயர் வைத்து உள்ளோம். இந்த நீல நிலாவை அறிவியல் மையங்களில் வந்துதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்.

சென்னையில் நாளை நீல நிலா காட்சி

அந்தவகையில் சென்னையில் 31-ந் தேதி (நாளை) இரவு 7.05 மணி முதல் வானில் நிகழும். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 30-ந் தேதி பார்க்க முடியும். ஒரே மாதத்தில் நீல நிலவு அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும். இந்திய நேர அட்டவணைப்படி ஒவ்வொரு மாதமும் எப்போது தொடங்கும் என்ற விவரமும் நம்மிடம் உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வான்நோக்கு நிகழ்வு நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள மாணவர்கள் சராசரியாக 100 பேர் வீதம் வந்து நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை' என்றார்.


Next Story