ஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி,
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு ஏப்ரல்,மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை சீசன்தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்
சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதற்கிடையில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம்அலை மோதியது.
கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். கடல்சீற்றம் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியதால் அவர்க ள் படகு துறையில் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.