மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சுந்தர்பிச்சை - முககவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர்பிச்சை மாமல்லபுரத்துக்கு திடீர் சுற்றுலா வந்த நிலையில், முக கவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.
இணையதளத்தின் முக்கிய தேடுதல் செயலியாக கூகுள் விளங்கி வருகிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஒ) சுந்தர்பிச்சை இருந்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த அவருக்கு கூகுள் நிறுவனம் மாதந்தோறும் மிகப்பெரும் தொகையை சம்பளமாகவும், பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் திடீர் பயணமாக தமிழகம் வந்த சுந்தர்பிச்சை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார். போலீஸ் பாதுகாப்புடன் வந்து அவர் ஐந்துரதம், கடற்கரை கோவில், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார். அப்போது அவருக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றியும், அங்குள்ள சிற்பங்களை வடிவமைத்த பல்லவர்களின் வரலாற்றையும், சுற்றுலா வழிகாட்டி யுவராஜ் விரிவாக விளக்கி கூறினார்.
பிறகு சுற்றுலா வரும் பயணிகள் யாரும் தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளாத வகையில் தன் தலையில் தொப்பி அணிந்து, தன் முகத்தை முககவசத்தால் முழுமையாக மூடிக்கொண்டு சுந்தர்பிச்சை சுற்றிப்பார்த்துவிட்டு சென்றார். மேலும் பத்திரிக்கையாளர், பொதுமக்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு அவர் அருகில் புகைப்படம் எடுத்துவிட போகிறார்கள் என தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் வந்த பவுன்சர்கள், விழிப்புடன் இருந்து யாரும் அவரது அருகில் நெருங்கவிடாமல் அரண் போல் அவரை பாதுகாத்து அழைத்து சென்றதை காண முடிந்தது.