தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி

பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பல்லடம்
பல்லடம் அருகே கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு முறையாக இல்லை என்று குற்றம் சாட்டியதால் ஊராட்சி மன்ற தலைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே க.அய்யம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலர் ஊராட்சியின் வரவு -செலவு கணக்குகள் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி கவிதாமணி பதிலளித்தார். ஆனால் ஊராட்சி மன்ற தலைவி கூறிய வரவு - செலவு கணக்குகள் முறையாக இல்லை என்று கூறி அவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கவிதாமணி மன வேதனை அடைந்தார். கிராம சபை கூட்டம் முடிந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவருடைய வீட்டில் இருந்தவர்களும் மற்றும் அக்கம் - பக்கத்தினரும் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி தீயை பற்றவைக்க விடாமல் காப்பாற்றினார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவி கவிதா மணியை தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று பல்லடம் நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் கவிதாமணி ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரது மனம் புண்படும்படி பேசி தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.