ராசிபுரம் அருகேகோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் பூசாரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த 28 ஆண்டுகளாக அத்தியப்பன் (வயது 90) என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். இதற்காக அவர் கோவிலின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அத்தியப்பன் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே நேற்று காலையில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
தற்கொலை
அப்போது பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கருவறை பின்புறமுள்ள வேப்ப மரத்தில் அத்தியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூசாரியின் அண்ணன் மகன் கணபதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார் பூசாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவில் உள்ளே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இறந்த பூசாரி அத்தியப்பனின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாலூர் அருகே உள்ள பூலாம்பாடி ஆகும். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு தியாகராஜன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.