பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்ததால் காதல் கணவரும் தற்கொலை


பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்ததால் காதல் கணவரும் தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2023 1:00 AM IST (Updated: 13 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே இதய நோய்க்கு தனது 3 மாத குழந்தை பலியான வேதனையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே இதய நோய்க்கு தனது 3 மாத குழந்தை பலியான வேதனையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

முகநூலில் மலர்ந்த காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 30), லாரி டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

அப்போது ஜலபதிக்கும், குமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா தேங்காய்பட்டணம் அருகே கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது.

என்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியா தான் என்ஜினீயர் என்றாலும், முகநூலில் பழகிய லாரி டிரைவர் ஜலபதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் அன்பாக பேசி வந்தனர். இதையடுத்து சில நாட்களில் நட்பு காதலாக மாறியது. காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணம்

ஆனால் காதலில் தீவிரமாக இருந்த அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதய நோய் குறைபாட்டால் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்தது.

தற்கொலை

குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா யாரிடமும் சரிவர பேசாமல் வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ந் தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பாக உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்ததால் சம்பவம் குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரனும் விசாரணை நடத்தி வந்தார்.

கணவரும் தற்கொலை

மேலும் தற்கொலை செய்து கொண்ட அபிசால்மியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோர் குமரி மாவட்டத்தில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை செய்து கொண்டது மற்றொரு புறம் என வேதனையின் உச்சத்தில் ஜலபதி இருந்தார். இதனால் விபரீத முடிவாக நேற்று முன்தினம் ஜலபதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரும் தற்கொலை தொடர்பாக உருக்கமான கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜலபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி டிரைவர், தனது 3 மாத குழந்தை இதய நோயால் இறந்த வேதனையில் மனைவியும் தற்கொலை செய்ததால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


'குமரி கடலில் சாம்பலை கரைச்சிடுங்க'

பெண் என்ஜினீயரின் கடைசி ஆசை

உடல்நலக்குறைவால் குழந்தை இறந்ததால் வேதனையில் அபிசால்மியா கடந்த 6-ந் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில்,'என் சாவுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கணும். அவ கூடவே இருக்கணும்னு தோணுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை. யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம். வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன். அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா நீ வருந்தாத. அண்ணன் உன்ன நல்லா பார்த்துக்குவான்' என்று எழுதப்பட்டிருந்தது

'மனைவியை அடக்கம் செய்த இடத்தில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்'

இதய பாதிப்பால் குழந்தை இறந்த வேதனையில் அபிசால்மியா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை, மனைவியை பறி கொடுத்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட ஜலபதி தற்கொலைக்கு முன் 4 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னால் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு அபி, பாப்பாவை பார்க்கணும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன். `லவ் யூ ஷோ மச் அபி'. என்னை எல்லோரும் மன்னித்துவிடுங்க அப்பா பிளீஸ். அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை.

எனக்கு எந்த ஒரு சடங்கும் செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள். செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா, அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி. அதனால் நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன்.

அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம். இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். இரவு அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று. எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை அதனால் தான் இந்த முடிவு. `லவ் அண்டு லவ் ஒன்லி' அபிசால்மியா. `திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே'.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story