மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட மேஸ்திரி
பென்னாகரம் அடுத்த மாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் தமிழன் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் மோனிஷா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தமிழன் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோனிஷா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த வாரம் தமிழன் பெங்களூருவில் இருந்து மாங்கரைக்கு வந்தார். பின்னர் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் மோனிஷா வர மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனால் மன உளைச்சல் அடைந்த தமிழன் பட்டாளம்மன் ஏரிக்கரையில் விஷம் குடித்து விட்டு தனது தாயாரிடம் தெரிவித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழன் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய தந்தை ஆறுமுகம் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.