திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகள்
திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரும்பு சாகுபடி
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள கீழக்காவட்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கரும்பை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் 20 ஏக்கருக்கு மேல் கரும்பை பயிரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் கரும்பின் தோகைகள் கடந்த சில நாட்களாக காய்ந்து வருவதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது குறித்து கோத்தாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதையடுத்து, நோயை கட்டுப்படுத்த கோத்தாரி சர்க்கரை ஆலையால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை 5 முறை அடித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இந்த நோய் அதிகளவில் பரவி சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 ஏக்கரிலும் பரவி கரும்பின் தோகைகள் காய்ந்தும், கரும்பின் வளர்ச்சி வெறும் 3 அடியாக குறைந்தும் காணப்படுகிறது.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் கரும்பின் நிலையை கண்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள். மேலும் தங்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வேளாண்மை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.