கரும்பு சாகுபடி பணிகள் தீவிரம்


கரும்பு சாகுபடி பணிகள் தீவிரம்
x

அய்யம்பேட்டை அருகே கரும்பு சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே கரும்பு சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு சாகுபடி

தஞ்சை மாவட்டம். அய்யம்பேட்டை அருகே மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரகாரம், புது தெரு, உள்ளிக்கடை, பட்டுக்குடி, புத்தூர், கூடலூர் ஆகிய கிராமங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் பெரும்பாலும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பதற்காகவே கரும்பு பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் வகையில் கரும்பு நடவு பணி செய்யப்படுகிறது.

மும்முனை மின்சாரம்

இந்த நிலையில் இப் பகுதிகளில் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வயல்களை உழுது கரும்பு நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு சாகுபடிக்காக பகல் நேரம் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுத்தெரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகாலமாக இந்த கிராமங்களில் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் வகையில் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். டீசல், உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம்.

ஆட்கள் பற்றாக்குறை

தற்போது இந்த பகுதியில் கடுமையான ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. நூறு நாள் வேலை தொழிலாளர்களை விவசாய வேலைகளுக்கு அனுப்ப வேண்டும் அல்லது 100 நாள் வேலைதிட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே தொய்வின்றி கரும்பு நடவு பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்த பகுதியில் பகலில் 8 மணி நேரமும், இரவில் 8 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து கரும்பு நடவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கரும்பு நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் பகல் நேரம் முழுவதும் (12 மணி நேரம்) தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story