உள்ளூர் சந்தையில்சீனி விலை உயர வாய்ப்பில்லை
மத்திய அரசு கூடுதலாக 30 லட்சம் டன் சீனி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் உள்ளூர் சந்தையிலும் விலை உயர வாய்ப்பு இருக்காது என சீனி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
மத்திய அரசு கூடுதலாக 30 லட்சம் டன் சீனி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் உள்ளூர் சந்தையிலும் விலை உயர வாய்ப்பு இருக்காது என சீனி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
ஏற்றுமதிக்கு அனுமதி
இதுபற்றி வணிக வட்டாரத்தினர் கூறியதாவது:-
அகில இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் 2022 -2023-ம் ஆண்டில் 90 லட்சம் டன் சீனி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே 60 லட்சம் டன் சீனி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது மேலும் 30 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கரும்பு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு இந்த கூடுதல் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த ஏற்றுமதி வருகிற மே 31-ந் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சர்க்கரை ஆலைகள் தங்களிடம் இருப்பு உள்ள ஏற்றுமதிக்கான சீனியை மற்ற ஆலைகளில் உள்ள உள்ளூர் வினியோகத்திற்கான கூடுதல் சீனி இருப்புடன் மாற்றம் செய்து கொள்ளலாம்.
நிலுவைத்தொகை
இந்த மாற்றத்தை 60 நாட்களுக்குள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் உள்ளூர் சந்தையிலும் சீனி விலை உயர்வுக்கு வாய்ப்பில்லாத நிலையே உள்ளது. இதன் மூலம் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையினை பட்டுவாடா செய்ய வாய்ப்பு ஏற்படும்.
மத்திய அரசு உள்ளூர் சந்தையில் வினியோகத்திற்கு 275 லட்சம் டன் சீனியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் 50 லட்சம் டன் சீனி எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 லட்சம் டன் சீனியை ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது சீனி உற்பத்தியை கணக்கிட்டு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே தற்போதைய நிலையில் உள்ளூர் சந்தையில் சீனி விலை உயர்வுக்கு வாய்ப்பில்லாத நிலையே நீடிக்கிறது என சீனி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.