விவசாயி சாவு வழக்கில் திடீர் திருப்பம்: புதையல் ஆசையால் நரபலி கொடுத்த கொடூரம்


விவசாயி சாவு வழக்கில் திடீர் திருப்பம்: புதையல் ஆசையால் நரபலி கொடுத்த கொடூரம்
x

விவசாயி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக புதையல் ஆசையால் அவரை நரபலி கொடுத்த கொடூரம் தெரியவந்தது. இதுதொடர்பாக நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் 1½ அடி ஆழ குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் இறந்து கிடந்தார். குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி கிடந்தது. லட்சுமணனின் மர்மச்சாவு குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கைது

இதில் லட்சுமணனின் நண்பரான தர்மபுரி மாவட்டம் முருங்கைமர தரிசு கிராமத்தை சேர்ந்த மணி (65) என்பவா் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மணியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கொலையான லட்சுமணனும், நானும் கடந்த காலத்தில் ஒன்றாக வேலை செய்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மகளுக்கு பேய் பிடித்திருந்ததால் பேய் ஓட்டுவதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிரஞ்சீவி என்ற சாமியார் வந்தார். அவர் பேய் ஓட்டிவிட்டு செல்லும்போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறினார். அதை எப்படியும் எடுக்க வேண்டும் என லட்சுமணனுக்கு ஆசை ஏற்பட்டது. அதனால் என்னை தொடர்பு கொண்டான்.

நரபலி

எனக்கும் புதையல் மீது தீராத ஆசை ஏற்பட்டது. நரபலி கொடுத்தால் தான் புதையல் கைக்கு கிடைக்கும் என சாமியார் கூறியதை லட்சுமணன் என்னிடம் கூறினான். அதனால் யாரை நரபலி கொடுப்பது என யோசித்து வந்தோம். அந்த நேரத்தில் தான் புதூர் கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண் தனக்கு பேய் ஓட்டவேண்டும் என லட்சுமணனிடம் வந்தார்.

அதனால் அவரை பலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தோம். அதற்காக சம்பவத்தன்று ராணியை வெற்றிலை தோட்டத்திற்கு வருமாறு லட்சுமணன் கூறியிருந்தான். புதையல் இருப்பதாக கூறப்படும் இடத்தில் 1½ அடிக்கு குழியும் தோண்டி விட்டோம்.

கட்டையால் தாக்கி கொன்றேன்

ஆனால் எதிர்பார்த்தபடி ராணி அங்கு வரவில்லை. அந்த நேரத்தில் புதையலை தான் மட்டும் அடைய வேண்டும் என நினைத்த லட்சுமணன் என்னை நரபலி கொடுக்கும் நோக்கத்தில் கழுத்தில் கடிக்க வந்தான். இதனால் சுதாரித்துக் கொண்ட நான் அவனை கொலை செய்து நரபலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தேன். அதன்படி கட்டையால் தலையில் அடித்து லட்சுமணனை கொலை செய்தேன். ஆனால் நரபலி கொடுத்தும் பூஜைகள் செய்தும் புதையல் கிடைக்கவில்லை. அதனால் அங்கிருந்து தப்பியோடி விட்டேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறி உள்ளார்.


Next Story