குற்றாலத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்


குற்றாலத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றாலத்தில் விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை (2023) திரும்பப் பெற வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை கைவிட வேண்டும். விழுப்புரம்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உயரத்தை பல மடங்கு உயர்த்தி அமைப்பதை கைவிட வேண்டும். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். திருவள்ளூர் சாட்டிலைட் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 'தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை கைவிட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கோவையில் சிறுவாணி அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு கனிமவளங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கனிமவளங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். தமிழக அரசு நெல் டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்புக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் மண்டல தலைவர் மாடசாமி, மண்டல கவுரவ தலைவர் சுடலைக்கண்ணு, தென்காசி மாவட்ட தலைவர் மகேந்திர மாரியப்பன், புளியரை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே விவசாய சங்கத்தின் சார்பில், கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்க வலியுறுத்தியும் புளியரையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து விவசாயிகள் வந்து குற்றாலத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story