நொய்யல், குளித்தலை பகுதிகளில் திடீர் மழை
நொய்யல், குளித்தலை பகுதிகளில் திடீர் மழை பெய்தது.
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், உப்புப் பாளையம், நத்தமேடு, குந்தாணிப்பாளையம், வேட்டமங்கலம், புன்னம்சத்திரம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, குளத்துப்பாளையம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், பேச்சிப்பாறை, கொங்குநகர், திருக்காடுதுறை, கோம்புப்பாளையம், நஞ்சை புகழூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்ற கூலித் தொழிலாளர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், டிபன் விற்பனை கடைகள், பலகாரக்கடைகள், பூக்கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் மழையால் அவதிப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாமல் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், கூலித் தொழிலாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.
இதேபோல் குளித்தலை மற்றும் குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே மழை விட்டு விட்டு பெய்தது. சில நேரங்களில் சற்று மிதமான மழையும் பல நேரங்களில் சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது. ஆனால் அனைத்து பகுதிகளும் ஒரே நேரத்தில் மழை பெய்யவில்லை. சில கிராம பகுதிகளில் மாலை நேரங்களில் மட்டுமே லேசான மழை சிறிது நேரம் பெய்தது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.