சாக்கடை நீரை வெளியேற்ற வலியுறுத்தி ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
ஆத்தூர்,
சாலைமறியல்
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் 4-வது வார்டு பகுதியில் ஆத்தூர்- ராசிபுரம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் சாக்கடை நீர், மழைநீர் செல்ல பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளால் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் சாக்கடை நீர் தேங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், சாக்கடை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நேற்று காலை ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சமரசம்
தகவல் அறிந்ததும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தில், செயற்பொறியாளர் விஸ்வநாதன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாக்கடை நீர் செல்ல உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.