குற்றாலம் அருவிகளில் திடீர் நீர்வரத்து
குற்றாலம் அருவிகளில் நேற்று திடீரென நீர்வரத்து அதிகரித்தது.
குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும் சீசன் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மொத்தம் சுமார் 15 நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்படுகிறது. அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
இந்தநிலையில் நேற்று மாலையில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பன்னீர் தெளித்தது போன்ற சாரல் மழை சிறிது நேரம் பெய்தது. இதனால் குளுமையான சூழல் மாலைக்கு மேல் நிலவியது. சுமார் 6 மணிக்கு ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இங்கு 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது. தண்ணீர் இல்லாமல் திடீரென தண்ணீர் விழுந்ததால் மரக்கட்டைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயின் அருவியில் இரவு 8.45 மணிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை கேள்விப்பட்ட உள்ளூர்வாசிகள் மெயின் அருவியில் குளித்துச் சென்றனர்.