திடீர் உடல்நலக்குறைவு; இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி


திடீர் உடல்நலக்குறைவு; இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
x

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

பாரதிராஜா 1977-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் மூலம் இயகுனராக அறிமுகமானார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தையும் இயக்கினார். இந்த படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. 1990-களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜவுக்கு உண்டு.


Next Story