ராபர்ட்பயஸ் திருச்சி சிறப்பு முகாமில் திடீர் உண்ணாவிரதம்
ராபர்ட்பயஸ் திருச்சி சிறப்பு முகாமில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 4 பேரும் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த முகாமில் ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஒரு அறையிலும், முருகன், சாந்தன் ஆகியோர் மற்றொரு அறையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ராபர்ட்பயஸ் நேற்று முதல் சிறப்பு முகாமில் திடீர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ரத்தஅழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு சிறப்பு முகாமில் நடைபயிற்சி மேற்கொள்ள போதுமான இடவசதி இல்லை என்றும், தன்னை முகாமில் இருந்து விரைவில் விடுவித்து ஜெர்மனி நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.