தாய்ப்பால் குடித்த குழந்தை திடீர் சாவு
திண்டுக்கல்லில் தாய்ப்பால் குடித்த குழந்தை திடீரென்று இறந்தது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் திலீப் அந்தோணிராஜ் (வயது 29). இவரது மனைவி மரிய பெர்வின் பிரின்சியா (26). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை பிறந்த அன்றே உடல்நல குறைவால் இறந்துவிட்டது. இதனால் மற்றொரு குழந்தையை தம்பதியினர் கவனத்துடன் வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த குழந்தை பசியால் அழுதது. இதனால் மரிய பெர்வின் பிரின்சியா தனது குழந்தைக்கு பாலூட்டினார். அப்போது திடீரென்று குழந்தை மயங்கியது. மேலும் குழந்தையின் மூக்கில் இருந்து பால் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, உடனடியாக தங்களது குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
தாய்ப்பால் குடித்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.