சேரன்மகாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுடலை ஆண்டவர் கோவில்
சேரன்மாதேவி பொழிக்கரை தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவிலில் ஹரிஹர புத்திர இந்திர அய்யனார் சாஸ்தா, பேச்சியம்மன், மாசானமுத்து, சிவணைந்த பெருமாள், முண்டசாமி, கட்டையேறும் பெருமாள் மற்றும் தனி சன்னதியாக இசக்கியம்மன் ஆகிய தேவதைகள் அருள் புரிந்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமையில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. இரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு, ராமாயணத்தை தொடர்ந்து அம்மன் கதை நடைபெற்றது.
நேற்று காலை அம்மன் வழிபாடு, மதியம் உச்சிகால பூஜை மற்றும் சாமியாடிகள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இசக்கியம்மன் சிலை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் நேர்த்தியாக தொட்டில் பிள்ளை எடுத்து வந்தனர். தொடர்ந்து இரவு சிறப்பு புஷ்ப அலங்காரம், தீபாராதனை, கைவெட்டு, திரளை கொடுத்தல் மற்றும் சாம பூஜை, படப்பு தீபாராதனை நடைபெற்றது. பன்றி பலி, கிடா வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் நையாண்டி மேளம், செண்டை மேளம், வில்லிசை மற்றும் மகுட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பக்தர்கள்
விழாவில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், சமத்துவ மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங்குளம் கணேசன், நெல்லை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சீவலமுத்து என்ற குமார், சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், துணைத்தலைவர் பால் மாரி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் முருகன் ரவிச்சந்தர், அன்வர் உசேன், பூமிகாலப்பெருமாள், மோனிகா ரவிசங்கர், சக்திவேல், சமூக ஆர்வலர் பீர்காதர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் அன்னதான ஏற்பாடுகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை சேரன்மாதேவி பொழிக்கரை இந்து நாடார் மகமை கமிட்டியினர் செய்திருந்தனர்.