வெற்றிகரமாக நடந்த சோதனை ஓட்டம்.. விரைவில் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை


வெற்றிகரமாக நடந்த சோதனை ஓட்டம்.. விரைவில் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை
x

முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் சேவையை மத்திய அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

மதுரை,

நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன. இரு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயண நேரம் வெகுவாக குறைகிறது. இதனால் வந்தே பாரத் ரெயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் சேவையை மத்திய அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு, சென்னை-நெல்லை, கோவை-பெங்களூரு, சென்னை-கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த 2 நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

விரைவில் இந்த ரெயில் சேவை தொடங்க உள்ளது. முன்னதாக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு, திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு காலை 6 மணி அளவில் சென்றது. அங்கிருந்து திருச்சிக்கு 7.15 மணிக்கும், சேலத்துக்கு 9.55 மணிக்கும், மதியம் 1.15 மணி அளவில் பெங்களூருவுக்கும் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரெயில் இரவு மதுரை வந்தடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்;

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 20-ந்தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சேவை தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. புதிய ரெயிலுக்கான அதிகாரப்பூர்வ வழித்தடம், கட்டண விவரம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஓரிரு நாளில் வெளியிடப்படும். மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு போதுமான ரெயில்கள் இல்லை. எனவே வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.


Next Story