விவசாய குழுக்களுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்


விவசாய குழுக்களுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
x

விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23 மூலம் இயற்கை வேளாண்மை ஊக்குவித்தல் பொருட்டு இயற்கை விவசாய ஆய்வாளர் குழு, இயற்கை விவசாய மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட விவசாய குழுக்களுக்கு மானிய உதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒப்பற்ற நோய் எதிர்ப்பு தரும் உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மண்புழு உரம், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீனமிலம் போன்ற இடு பொருட்களை உற்பத்தி செய்திடும் அலகுகளை இயற்கை விவசாய ஆர்வமுள்ள குழுக்கள் மூலம் அமைத்திட மானிய உதவி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இதனால் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின், இயற்கை இடு பொருள் தேவைகளை பூர்த்தி செய்திட விவசாய குழுக்கள் மூலம் சிறிய அளவிலான அலகுகள் அமைக்கப்படும். கிராம அளவில் வேலைவாய்ப்பு உள்ளூர் வளங்களின் பயன்பாடு மற்றும் மறு சுழற்சியை ஊக்குவிப்பதன் மூலம் உருவாக்கப்படும்.

இயற்கை விவசாய ஆர்வலர் குழு, இயற்கை விவசாய மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்ட விவசாயிகள் குழு போன்றவற்றுக்கு இடு பொருள் உற்பத்தி அலகு நிறுவுவதற்கு ஒரு அலகுக்கு ரூ.1 லட்சம் மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் குழுக்கள் இயற்கை இடு பொருள் உற்பத்திக்கான கலன்கள், பேக்கேஜிங் லேபிளிங், மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்காக மேற்படி ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. இந்த அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் இடு பொருட்களை உழவர் சந்தைகளில் விற்பனை செய்திட தேவையான அனுமதி வழங்கப்படும்.

இதன் மூலம் நஞ்சற்ற விளை பொருட்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும். விவசாயிகளின் சமூக பொருளாதாரம் உயருவதுடன் வேலை வாய்ப்பும் பெருகும், அங்கக உயிர் வளம் மூலம் மண் வளம் மேம்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5 ஆண்டுகள் உற்பத்தியை தொடர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற கூடுதல் விவரம் விரும்பும் விவசாய குழுக்கள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story