199 பயனாளிகளுக்கு ரூ.9¾ கோடி மானிய கடன்


199 பயனாளிகளுக்கு ரூ.9¾ கோடி மானிய கடன்
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் ரூ.9¾ கோடி மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

துரித மின்இணைப்பு திட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது (தாட்கோ) ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் பொருட்டு பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அம்மக்களின் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார நிதித்திட்டம், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கான இலவச துரித மின் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 199 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 6 லட்சத்து 91 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.9 கோடியே 88 லட்சத்து 79 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுவில் 35 குழுக்களில் உள்ள 420 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.1 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.16.23 கோடி மானியத்துடன் கடனுதவி

அதேபோல் பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 83 பயனாளிகளுக்கு சுயத்தொழில் தொடங்க ரூ.1 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.3 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 36 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுயத் தொழில் தொடங்க ரூ.10.80 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.24.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.70.95 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது. 10 பழங்குடியின பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.25.30 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் ரூ.16.23 கோடி மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story