முதல் தகவல் அறிக்கைகள், முக்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு:விக்கிரவாண்டி ஆசிரம வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரம வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நேற்று தொடங்கினர். ஆசிரம நிர்வாகி உள்பட 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆழக்கூடா பகுதியை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோரை அடைத்து வைத்தும், இரும்புச்சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்தது தொடர்பாகவும், அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாகவும் எழுந்த புகாரின்பேரில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேரை கெடார் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 143 பேர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஆசிரமத்தில் இருந்து மாயமான 11 பேரின் கதி என்ன என்பது பற்றி தெரியவில்லை.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆசிரம வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி ஆசிரம சம்பவம் தொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையை தொடங்கினர்
இதனைத்தொடர்ந்து நேற்று மாலையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். இவ்வழக்கை விசாரிப்பதற்காக விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் ரேவதி, சேலம் குமார், கார்த்திகேயன், திருவண்ணாமலை தனலட்சுமி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கெடார் போலீசார் ஒப்படைத்த வழக்கின் முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட கைதான 9 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.