மாமல்லபுரம் அருகே டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதிய கார் - போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி


மாமல்லபுரம் அருகே டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதிய கார் - போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x

மாமல்லபுரம் இ.சி.ஆர். ரோட்டில் கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதிய விபத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு.

சென்னை


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள காந்தி நகரில் வசித்து வருபவர் குருமூர்த்தி(வயது 49). இவர் உடுமலை பேட்டை நகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருந்தார். பதவி உயர்வுக்காக இன்று அவர் தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புலிக்குகை என்ற இடத்தில் கார் வரும்போது திடீரென காரின் வலது பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறி கார் சாலை ஓரத்தில் உள்ள கல்லில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரின் ஒரு பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி கொண்ட அவரது உடலை ஜெ.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் உடைத்து மீட்டனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story