மோட்டார் சைக்கிள் காலில் ஏறியதால்வாலிபர்களை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் காலில் ஏறியதால் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் 3 வாலிபர்களை தாக்கினார். இதனால் போலீசை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் காலில் ஏறியதால் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் 3 வாலிபர்களை தாக்கினார். இதனால் போலீசை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர்கள் மீது தாக்குதல்
பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை சாலை சந்திப்பில் மகேந்திரமங்கலம் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்துமாறு கை காட்டினர்.
அப்போது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி கால் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதாக தெரிகிறது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வாலிபர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வெள்ளிச்சந்தை சாலை சந்திப்பில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 3 வாலிபர்களும் எண்டப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 24) மற்றும் அவரது நண்பர்கள் என்பதும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.