வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு பள்ளி முதலிடம் பிடித்து சாதனை


பெரம்பலூரில் மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பெரம்பலூர்

குழு விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. கபடி, கோ-கோ, கால்பந்து, வாலிபால், ஹேண்ட் பால், ஆக்கி, பூப்பந்தாட்டம், கூடைப்பந்து, எறி பந்து, டேபிள் டென்னிஸ் (ஒற்றையர், இரட்டையர்), இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) ஆகிய குழு போட்டிகள் நடந்தன.

போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோ-கோ போட்டி

இதில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறு வட்ட அளவில் 14, 17, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் பங்கேற்றன. இதில் கபடி போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தன.

கோ-கோ போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன. கால்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியும், 17, 19 வயதுகளுக்குட்பட்ட பிரிவில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன.

சு.ஆடுதுறை பள்ளி முதலிடம்

வாலிபால் போட்டியில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பிரிவில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. பூப்பந்தாட்டம் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. கூடைப்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும், இரட்டையர் பிரிவில் 14, 19 வயதுகளுக்குட்பட்ட பிரிவில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

டேபிள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. அந்த அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் விளையாடவுள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story