தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு - டாக்டர்கள், மாணவர்கள் கருத்து


தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு - டாக்டர்கள், மாணவர்கள் கருத்து
x

மருத்துவ பாடங்களை தமிழ்வழியில் படிப்பது குறித்து டாக்டர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

டாக்டர்களின் சேவை

'மருந்துகள், நோய்களை குணப்படுத்தும். ஆனால் டாக்டர்களால் மட்டும்தான் நோயாளிகளை குணப்படுத்த முடியும்' என்பது சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் கர்ல் ஜங்கின் கூற்று. தன்னுடைய வாழ்நாளில் நோயால் பாதிக்கப்படாத மனிதர்களே கிடையாது. நோய்கள் தாக்குதல் தொடுக்கும்போதெல்லாம் எதிர்முனை தாக்குதல் தொடுத்து, மனிதர்களுக்கு அரணாக நின்று நீடித்த வாழ்வு கொடுப்பவர்கள் டாக்டர்கள். டாக்டர்கள் மட்டும் இல்லை என்றால், மனிதர்களின் ஆயுள் குறைந்து போகும்.

டாக்டராகி சேவையாற்றுவதற்காக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி., எம்.எஸ். ஆகிய மருத்துவப்படிப்புகளை படிக்கிறார்கள். இந்த படிப்புகளில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அதில் பெரும்பாலான மருத்துவ சொற்றொடர்கள் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது போன்று, தேர்வையும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கே மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழில் மருத்துவ பாடங்கள்

ஆங்கிலத்தில் புரிந்து படிப்பதற்கு சிரமப்படும் மாணவ-மாணவிகளுக்காக, அவரவர் தாய்மொழியில் மருத்துவ பாடங்களை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து நிலவியது. இதையடுத்து நமது நாட்டிலேயே முதலாவதாக மத்திய பிரதேசத்தில் மருத்துவப்படிப்பில் உள்ள 3 பாடங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

உத்தரபிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் புதிதாக தமிழ்வழியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்வழி கல்வி மாணவர்களுக்காக மருத்துவ பாடங்கள், செம்மொழியான தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. மருத்துவம் சார்ந்த 25 பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும், அதில் 13 பாடப்புத்தகங்கள் முக்கிய பாடங்களாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பயன் உள்ளதா?

முதற்கட்டமாக 'கிரேஸ் அனாடமி பார் ஸ்டூடன்ஸ்', 'கைடன் அன்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி', 'பெய்லி அன்ட் லவ்ஸ் சாட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி (பாகம்-1) ' 'முதலியார் அன்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ்டெட்ரைக்ஸ்' ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாதத்துக்குள் மொழிபெயர்க்கப்பட்ட பாடப்புத்தகங்களை, நடப்பு ஆண்டு மருத்துவக்கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களின் வசம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மருத்துவப்பாடங்களை தமிழ்வழிக்கல்வியில் கற்பது மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்காக மருத்துவப்பாடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது பயன் உள்ளதா?, இதனால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பது குறித்து மருத்துவம் சார்ந்த மாணவர்கள், டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

அரசுக்கு பாராட்டு


சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் ஆர்.எம்.பூபதி:- தமிழில் மருத்துவ படிப்புக்கான கலைச்சொற்கள் ஏராளமாக இருக்கிறது. உடல் இயக்கம், பகுத்தறிதல், உடற்கூறு இயல் என மருத்துவ கலைச்சொற்களை நாங்கள் கட்டுரை மூலமாகவும், புத்தகங்கள் வடிவிலும் எழுதி இருக்கிறோம். தமிழக மாணவர்களுக்காக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழ்மொழியில் கொண்டுவருவது நல்ல முன்னெடுப்பு. தமிழக மாணவர்கள் தமிழ்வழியில் மருத்துவப்படிப்பை படிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மருத்துவம் சார்ந்த தமிழ் அறிஞர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அனைவரையும் அழைத்து மொழிபெயர்க்க கூறினால், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான பாடங்கள் அனைத்தையும் விரைவாக மொழி பெயர்த்துவிடலாம். தமிழில் பாடப்புத்தகங்கள் இருந்தால், தமிழ்வழி மாணவர்களுக்கு ஆரம்பநிலை மருத்துவக்கல்வி நன்றாக இருக்கும். அப்படி இருக்கும்போது மருத்துவ ஆராய்ச்சியும் சிறப்பாக அமையும். தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்வழியில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் முயற்சியும் சிறப்பானது.

இதனை நான் வரவேற்கிறேன். உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும். மருத்துவக்கல்வி தொடர்பான புத்தகங்களை நானே மொழி பெயர்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தமிழக அரசு தனது முயற்சியாக அதை செய்து காட்டியிருப்பது, பாராட்டத்தக்கது.

நல்ல ஆரம்பம்


இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.வெங்கடேஷ்:- தமிழில் மருத்துவம் என்ற செய்தியை படித்தவுடன் மனதில் 2 வினாக்கள் எழுந்தன. இது சரியா? தவறா?. சாத்தியமா? சாத்தியம் இல்லையா? இதில் ஆங்கில மருத்துவம் கற்று அலோபதி பயின்று வரும் டாக்டர்கள் பெரும்பாலானோர் இது தவறு. சாத்தியம் இல்லை என்று நினைக்கக்கூடும். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உலகின் பெரும்பாலான மருத்துவ இதழ்கள், புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே பிரசுரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் மருத்துவம் படித்தால் உலகளவில் வேலைவாய்ப்புகள் அதிகம். ஆங்கிலத்தை தனது சொந்த மொழி போன்று கொண்டாடத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனவே தமிழில் கற்பதை விட ஆங்கிலத்தில் கற்பது சுலபம், எளிது என்று நம் மரபணுவில் பதிந்துவிட்டது. ஆகையால் தமிழில் படிப்பது கஷ்டம் என்ற சந்தேகம் மனதில் எழுகிறது. இது சாத்தியம் என்று நினைக்கக்கூடியவர்கள், தமிழ் ஆர்வலர்களாக இருப்பார்கள்.

ஒரு பார்த்திபன் கனவு சோழ பேரரசை உண்டு பண்ணவே 300 ஆண்டுகள் எடுத்தன. அப்படி இருக்கையில் நாம் இப்போது முதல் அடி எடுத்து வைத்தால் பல ஆண்டுகள் கழித்தாவது தமிழில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது என்பதே என்னுடைய பதிவு. நாம் முதல் அடி எடுத்து வைத்து நம் பின்னால் வரும் சந்ததியர் மெதுவாக நகர்த்தி வந்து உலக அளவில் தமிழ் மருத்துவத்தை பறைசாற்றி நமக்கு அடையாளத்தை தேடி தருவதற்கு இது நல்ல ஆரம்பம். முன்னோட்டம்.

சிரமம் ஏற்படும்



கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்:- மருத்துவம் தமிழில் படிப்பது என்பது, தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால் அவர்களுக்கு படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அதே சமயத்தில் தமிழ்வழியில் படிக்கும்போது அவர்களுடைய தொழில்முறை என்பது தமிழகத்தின் உள்ளேயே வரையறுக்கப்பட்டு விடும். மருத்துவம் என்பது தொடர் படிப்பாகும். மேற்படிப்புக்கோ அல்லது பணிபுரிவதற்கோ மற்ற மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றால் சிரமத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 'லேன்செட்' போன்ற உலக புகழ்பெற்ற மருத்துவ இதழ்கள் படிப்பது என்பது டாக்டர்களுக்கு மிகமிக இன்றியமையாதது. இதேபோல மேலும் பல மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி இதழ்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழில் படித்தவர்கள் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படலாம்.

இதேபோல வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் மருத்துவம் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்கும்போது சிரமம் ஏற்படும்.

பயன் இல்லை



ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன்:- 'அலோபதி' என்பது ஆங்கில வழியில் வந்த மருத்துவம். இதுதான் உலக அளவில் நடைமுறையில் உள்ளது. தமிழ் மொழியில் அலோபதி மருத்துவத்தை போதிப்பதால், தமிழ் வழிக்கல்வியில் பிளஸ்-2 வரை முடித்த மாணவர்களுக்கு மட்டும் சற்று புரிதல் விரைவாக இருக்கும். தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் மேற்படிப்பு மற்றும் சிகிச்சை செய்தால் பிரச்சினை இல்லை. அவர்களே மேற்படிப்புக்காகவோ, பணிபுரிவதற்காகவோ வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றால், சிரமத்தை சந்திக்க நேரிடும். 'அலோபதி' மருத்துவம் தொடர்பான மருத்துவக்கல்வி பாடங்களை தமிழ்வழியாக நடத்துவதால், மக்களுக்கோ அல்லது டாக்டர்களின் மேம்பாட்டுக்கோ எந்த வகையிலும் பயன் இல்லை. ஆங்கிலத்தை சார்ந்த 'அலோபதி' மருத்துவத்தை, ஆங்கிலத்தில் படித்தால்தான் ஆழ்ந்து, புரிந்து படிக்கமுடியும்.

எளிதாக இருக்கும்



முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவி தேவதர்ஷினி:- என்னை போன்ற தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் அனைத்து புத்தகங்களையும் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதன்மூலம் மருத்துவப்படிப்பு சார்ந்த புத்தகங்களில் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள முடியாத வார்த்தையை, இந்த தமிழ்மொழி பெயர்ப்பு புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும். மிகவும் எளிதாகவும் இருக்கும். அரசின் இந்த முயற்சியை தமிழ்வழிக்கல்வி மாணவராக நான் பாராட்டுகிறேன்.




முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் கனிஷ்:- அரசின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று. தமிழ்வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக ஆங்கிலத்தில் மருத்துவ படிப்புகளை புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். ஆனால் சில மருத்துவ பாடங்கள் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் தெரியாத வார்த்தைகளை இதில் பார்த்து அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள முடியும். பாடங்களை புரிந்து படிக்கவும் ஏதுவாக அமையும் என்று நினைக்கிறேன். இருப்பினும் ஆங்கில அறிவு அவசியம். அதனோடு தமிழ் மொழிபெயர்ப்பும் இருப்பது மாணவ-மாணவிகளுக்கு நல்ல பயனை தரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story