முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும்வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் உத்தரவு
முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் ரூ.117¼ கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டம் மணம்பூண்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, முகையூர் ஒன்றியத்தில் 15- வது நிதி குழு மானியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பொது நிதி பணிகள் உள்ளிட்ட இதர திட்டங்களின் கீழ் கடந்த 2021-22 நிதியாண்டு முதல் தற்போதைய நிதியாண்டு வரை ரூ.117 கோடியே 34 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றியத்தில் நடைபெறும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது முகையூர் ஒன்றிய ஆணையாளர் சண்முகம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகளின் விபரங்கள் குறித்து எடுத்துக் கூறியதுடன், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் குணசேகரன், வசந்தி, மேலாளர் ஆதிலட்சுமி உள்பட ஒன்றிய அலுவலக அலுவலர்கள், பொறியியல் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.