மேயர் சரவணன் ஆய்வு
நெல்லை டவுன் பாட்டபத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் சரவணன் ஆய்வு
நெல்லை டவுன் பாட்டபத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார். மேலும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டிருந்தார். கர்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யும் மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டு ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்த ஊசி போடுவது குறித்து கேட்டறிந்தார். மேலும் இருமல் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வது, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ள விவரம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று நேரடியாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த மாத்திரை வழங்குவது போன்றவை குறித்தும் கேட்டார். இந்த ஆய்வின்போது துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கீதா, மருந்தாளுனர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.