போதையால் பாதை மாறும் மாணவர்கள்
போதையால் பாதை மாறும் மாணவர்கள் நல்வழிப்படுத்தும் முறைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரவமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
விதிகளால் என்ன பயன்?
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுபாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போதைப்பொருட்கள்
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கவனச்சிதறல்கள்
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம். விருதுநகர் மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர் டாக்டர் ராஜசேகரன்:- கடந்த காலங்களில் கூட்டுக்குடும்ப கலாசாரம் இருந்து வந்த நிலையில் குடும்பத்தில் படிக்கும் குழந்தைகளை கண்காணிக்க பெற்றோரை தவிர உறவினர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது பெற்றோர் மட்டும் குழந்தைகளுடன் இருந்துவரும் நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை உரிய முறையில் கண்காணிக்க வாய்ப்பு இருப்பதில்லை. படிக்கும் மாணவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அவர்களுக்கு கவனச் சிதறல்கள் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செல்போன் கலாசாரம் அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்கள் மூலம் அறிவு வளர்க்கும் தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் இம்மாதிரியான தவறான பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
தொடக்கத்தில் போதை பழக்கத்தை தொடங்கிய மாணவர்கள் வீட்டில் சிறு விஷயங்களுக்கும் பெற்றோரிடம் கோபப்படுவது, பொருட்களை உடைப்பது போன்ற செயலில் தான் தொடங்குகின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு இது புரிவதில்லை. நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவன் படிப்பில் பின்தங்கும் போது தான் அவர்கள் கவனிக்க தொடங்குகின்றனர். அதற்குள் எல்லை தாண்டி விடுகிறது. போதைப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. அதில் நிலைமை சீராகவில்லை என்றால் மருந்து, மாத்திரைகள் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சை அளித்தாலும் அவர்கள் இயல்பு நிலைக்கு மாறவில்லை என்றால் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்குள் செல்லாமல் இருக்க பெற்றோர் கவனிப்பும், ஆசிரியர்களின் கண்காணிப்பும் மிக அவசியமாகும்.
விழிப்புணர்வு
விருதுநகர் தலைமை ஆசிரியர் பெருமாள்:-கொரோனா பாதிப்பு காலத்தில் தான் மாணவர்கள் ஆன்லைன் முறை கற்றலில் ஈடுபடும்போது செல்போன் மூலம் அவர்களுக்கு தேவையில்லாத பல தகவல்கள் சேர்ந்த நிலையில் போதைப்பொருட்கள் அவர்களுக்கு அறிமுகமாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து சக மாணவர்கள் அருகில் வகிக்கும் இளைஞர்கள் ஆகியோரின் தொடர்பால் அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது.
பீடி, சிகரெட்டில் தொடங்கி கஞ்சா வரை சென்று விடுகிறது. போதை பழக்கத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் போலீஸ் துறை மூலம் மேற்கொண்டு வருகிறது.
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன்:- தமிழகத்தில் தற்போது போதைக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் விழிப்புடன் இருக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் தவறான வழியில் சென்றால் அவர்களை அடித்து திருத்தும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்தது. தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் போதையில் பாதை மாறுவதை தடுக்க ஆரம்பக்கல்வி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
சிவகாசி மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீநிகா:- சிவகாசி பகுதியில் உள்ள பல பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இவர்கள் பள்ளி நேரங்களிலேயே மது அருந்திவிட்டு வரும் நிலையும் உள்ளது. மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும். எனவே பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்துக் கொள்வார்கள்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த தலைமையாசிரியை தங்கரதி:- மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு வகுப்பில் படிக்கும் திறன் குறைகிறது. கவனச்சிதறலும், ஒழுக்கமின்மையும் ஏற்படுகிறது. போதை பழக்கங்களால் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களிடையே நண்பர்களாக பேசி பழகி அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும்.
தடம் மாறி விடக்கூடாது
ராஜபாளையம் சமூக ஆர்வலர் மாடசாமி:- இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டாக ஆரம்பித்த போதைப்பழக்கம் சமூக சீரழிவுக்கு காரணமாக அமைகிறது. பெரும்பாலான குற்றங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரிடம் இருந்து தொடங்குகிறது. எனவே மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் போதை தடுப்பு மையங்கள் அமைக்க வேண்டும். இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப்பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.