சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் இலவச சுற்றுலா திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர்கள் 50 பேர் ஒரு பஸ் மூலம் நேற்று மாமல்லபுரம் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட பயிற்சி கலெக்டர் ஆனந்த்குமார்சிங், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர். பிறகு பள்ளி மாணவ, மாணவிகள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
கடற்கரை கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்களை அங்குள்ள புல் தரையில் அமர வைக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அங்கீகாரம் பெற்ற மூத்த வழிகாட்டி வ.பாலன் என்பவர் மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் வரலாற்று தகவல்களை விளக்கி கூறினார்.
கடற்கரை கோவில் வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் தங்களை இலவச சுற்றுலா அழைத்து வந்த சுற்றுலாத்துறையினருடன் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துகொண்டனர். ஒருநாள் சுற்றுலாவுக்கு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு, தேனீர் வழங்கி சுற்றுலாத்துறையினர் கவனித்தனர். மாமல்லபுரம் சுற்றி பார்த்த பிறகு முட்டுக்காடு தட்ஷணசித்ரா கலைக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் அங்கு பழங்கால வீடுகள், பழங்கால ஓவியங்கள், பழங்கால கற்கள், சுடுமண் கலவைகள் போன்றவற்றை பார்த்து ரசித்தனர். இலவச சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க அவர்களுக்கு சுற்றுலாத்துறை சின்னம் பொருந்திய தொப்பிகள் வழங்கப்பட்டது.