தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை அன்போடு வரவேற்ற ஆசிரியர்கள்


தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை அன்போடு வரவேற்ற ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:30 AM IST (Updated: 15 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறைக்கு பிறகு தொடக்கப்பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அன்போடு வரவேற்றனர்.

திருநெல்வேலி

கோடை விடுமுறைக்கு பிறகு தொடக்கப்பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அன்போடு வரவேற்றனர்.

தொடக்கப்பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் எதிர்பார்த்ததை விட உச்சத்தை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14-ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நெல்லை, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் பள்ளிக்கூட நுழைவு வாயிலில் வந்து அழைத்து சென்றனர். அப்போது மாணவர்களுக்கு பன்னீர் தெளித்தும், கைகளில் சந்தனம் வைத்தும் வரவேற்றனர்.

பொம்மைகள் வழங்கினர்

முதல்முறையாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர் குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்து அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆசிரியர்களிடம் குழந்தைகளை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள் என்று கண்களில் கண்ணீர் ததும்ப கூறினர். குழந்தைகளும் தங்களின் தாயை பிரிந்து செல்ல மனமில்லாமல் கதறி அழுதனர். அவர்களை ஆசிரியர்கள் அன்போடு அழைத்து வந்து கையில் சாக்லேட், பொம்மைகளை வழங்கி அழுகையை நிறுத்தினர்.

முதல்நாளில் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கதைகள் சொல்லி வகுப்புகளை தொடங்கினர். தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தைகளை பெற்றோர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஒருசில குழந்தைகள் தங்கள் வகுப்பறையில் உள்ள மற்ற குழந்தைகளுடன் நட்பு பாராட்டினர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை பார்த்து குழந்தைகள் பரவசமடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

நெல்லை வண்ணார்பேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் புத்தகங்களை வழங்கி இனிப்புகள் கொடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்தனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை விடுவதற்காக அதிக அளவில் பெற்றோர் வந்ததால் பள்ளிக்கூடம் முன்பு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளி திறப்பை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் போக்குவரத்து போலீசார் அதனை உடனடியாக சரிசெய்தனர். பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.


Next Story