வனப்பகுதி வழியாக அச்சத்துடன் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள்


வனப்பகுதி வழியாக அச்சத்துடன் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள்
x
தினத்தந்தி 9 Oct 2023 7:30 PM GMT (Updated: 9 Oct 2023 7:30 PM GMT)

ஊட்டி-எடக்காடு பஸ் நேற்று தாமதமாக சென்றதால், வனவிலங்குகள் தொந்தரவு உள்ள வனப்பகுதி வழியாக மாணவர்கள் அச்சத்துடன் நடந்து சென்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

நீலகிரி

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம்-1 ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குள் என 270 வழித்தடங்களில் 335 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலா பிரதேசம் என்பதாலும் வெளி மாவட்ட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது. இதில் 50 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களையும் 50 சதவீதம் பேர் பொது போக்குவரத்தையும் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் பெரும்பாலான பேருந்துகள் இங்கு பழுதுடன் காணப்படுவதாகவும், கிராமப்புறங்களுக்கு சரி வர பஸ் வசதி இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து காலை 8.30 மணிக்கு தங்காடு வந்து அங்கிருந்து எடக்காடு செல்லும் பஸ் காலையில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்காடு, ஓரநல்லி, மந்தனை ஆகிய பகுதியில் இருந்து எடக்காடு பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் வனப்பகுதி வழியாக அச்சத்துடன் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், தங்காடு- எடக்காடு பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஊருக்குள் கரடி, காட்டெருமை, சிறுத்தை புகுந்து வருகிறது. இதற்கிடையே மாணவர்கள் வனப்பகுதியில் நடந்து செல்வதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பஸ்களை சரியாக இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story