ஆபத்தை உணராமல் பஸ்படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்
நன்னிலத்தில் இருந்து திருவாரூருக்கு ஆபத்தை உணராமல் பஸ்படிக்கட்டில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
நன்னிலம்:
நன்னிலத்தில் இருந்து திருவாரூருக்கு ஆபத்தை உணராமல் பஸ்படிக்கட்டில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் பள்ளி மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் ஒரு சில இடங்களில் பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
கூட்டம் அலைமோதும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன இந்த பள்ளிகளில் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவ- மாணவிகள் நன்னிலம் பஸ் நிலையத்தில் இருந்து தங்களது கிராமங்களுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர்.
ஆனால் பள்ளி நேரங்களில் நன்னிலத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் தான் இயக்கப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலையில் இந்த பஸ்சில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதும்.
ஆபத்தான பயணம்
கூட்டம் நெரிசல் காரணமாக சில மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணம் செய்யும் போது மாணவர் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு நன்னிலம்- திருவாரூர் வழித்தடத்தில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.