கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை மார்க்கத்தில் உரிய நேரத்துக்கு பஸ்கள் வராததால் மாணவ- மாணவிகள் அவதி
கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை மார்க்கத்தில் உரிய நேரத்துக்கு பஸ்கள் வராததால் மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி கொட்டுமேடு சாலை மார்க்கத்தில் செல்லும் மாநகர பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் உரிய நேரத்துக்கு வராததால் தினந்தோறும் கல்வாய், கன்னிவாக்கம், பெருமாட்டுநல்லூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், கல்லூரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தினந்தோறும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில்:-
பள்ளி மாணவ-மாணவிகள் அந்தந்த கிராம பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் வரும் என்று காத்திருக்கும் போது கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு மற்றும் கொட்டமேட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரும் மாநகர பஸ்கள் அனைத்தும் சரியான நேரத்துக்கு வருவது கிடையாது.
அப்படியே வந்தாலும் பள்ளி மாணவர்களை கண்டதும் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக எங்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. அன்றைய தினம் பள்ளிக்கு போக முடியாமல் மீண்டும் வீட்டுக்கு திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுவாஞ்சேரி கொட்டமேடு வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் நேரில் கள ஆய்வு செய்து மாநகர பஸ்களை குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் நின்று பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று அரசு பள்ளி மாணவ-மாணவிகள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.