போதிய பஸ்கள் இல்லாததால் மாணவ-மாணவிகள் பரிதவிப்பு


போதிய பஸ்கள் இல்லாததால் மாணவ-மாணவிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை-திண்டுக்கல் வழித்தடத்தில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், பூ வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கிற மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். குறிப்பாக நிலக்கோட்டை பகுதியில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இதேபோல் நிலக்கோட்டையில் கட்டிட தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தங்களது பணி நிமித்தமாக அன்றாடம் திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர்.

இதைத்தவிர நிலக்கோட்டை பகுதி மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில திண்டுக்கல்லுக்கு செல்கின்றனர். ஆனால் நிலக்கோட்டை-திண்டுக்கல் வழித்தடத்தில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், பூ வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர்.முன்பெல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காலக்கட்டத்துக்கு பிறகு நிலக்கோட்டை-திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையே நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுவும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது வாடிக்கையாக உள்ளது. பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை தொடர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சில் பயணிகள் இடையே தள்ளுமுள்று ஏற்பட்டது. மேலும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதுபோன்ற சம்பவங்களும் நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் அரங்கேறி வருகிறது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன்கருதி நிலக்கோட்டை-திண்டுக்கல் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story