கூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி


கூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் சென்ற ஆட்டோ சமீபத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர் தமிழ்ச்செல்வன் பலியானார். மாணவிகள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் நடத்திய பேச்சுவார்த்தையில் கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி அமைத்து தரப்படும். வேகத்தடை அமைத்து தரப்படும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் கேட்டனர்.

காத்திருப்பு

இந்த வசதிகளை செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி கல்லூரிக்கு அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோ நிறுத்தமும் அகற்றப்பட்டது. கல்லூரிக்கு வந்து செல்லும் வகையில் காலை, மதியம், மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆட்டோக்களில் கல்லூரிக்கு செல்லாமல் பஸ்களில் மட்டுமே சென்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஏராளமான மாணவ-மாணவிகள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை. ஆட்டோக்களும் கல்லூரிக்கு செல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைந்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் மாணவர்கள் முண்டியடித்தப்படி ஏறிச்சென்றனர்.

கூடுதல் பஸ் வசதி

மாவட்ட நிர்வாகம் உறுதிஅளித்தபடி எங்களுக்கு கல்லூரிக்கு செல்ல ஏதுவாக காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாநகர பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் உரிய தீர்வு காண வேண்டும்.


Next Story