பழனி அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மறியல்


பழனி அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மறியல்
x
தினத்தந்தி 26 July 2023 3:00 AM IST (Updated: 26 July 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே பாலசமுத்திரத்தில் அதிவேகமாக சென்ற மணல் லாரிகளை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே பாலசமுத்திரத்தில் அதிவேகமாக சென்ற மணல் லாரிகளை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் லாரிகள்

பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதி அமைந்துள்ளது. பாலசமுத்திரம் அருகே மலை அடிவாரம், பட்டா நிலங்கள் மற்றும் பாலாறு-பொருந்தலாறு அணை பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தினமும் 100-க்கும் அதிகமான லாரிகள் மணல் அள்ளிக்கொண்டு பாலசமுத்திரம் வழியாக சென்று வருகின்றன.

அவ்வாறு வரும் மணல் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் இந்த லாரிகளால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மணல் லாரிகள் வழக்கத்தை விட அதிவேகத்தில் இயக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் பாலசமுத்திரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நேற்று காலை பழனி சாலையில் உள்ள ஒரு வங்கி முன்பு திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 மணல் லாரிகளை அவர்கள் திடீரென்று சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், பாலசமுத்திரத்தில் தினமும் மணல் லாரிகள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்திலேயே சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேற்று முன்தினம் பாலசமுத்திரம் வழியாக லாரி ஒன்று மணல் ஏற்றிச்சென்றது. அப்போது பெரிய மண் கட்டி, சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். எனவே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக செல்லும் மணல் லாரிகளின் டிரைவர், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

அதேபோல் பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அப்போது அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story