மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும்- திருச்சி சிவா எம்.பி.
மாணவர்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சி சிவா எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் மொழியின் மேன்மையினை இளம் தலைமுறையினர் ெதரிந்து கொள்ளும் வகையில் தமிழ் கனவு நிகழ்ச்சி பல்வேறு கல்லூரிகளில் 100 நிகழ்வுகள் நடத்தப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக தமிழ் கனவு நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. உலகத்தில் மிக பழமையான 6 மொழிகளில் தமிழ் மட்டுமே இன்றும் உயிர்ப்புடன் எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும், இலக்கியமாகவும், இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறது. மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதுடன் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் தொண்டாற்ற வேண்டும். நமது தாய்மொழி தமிழை பாதுகாக்க வேண்டும் என்றார்.
மாபெரும் தமிழ் கனவு, தமிழ் பெருமிதம் குறிப்புகள் குறித்து வாசித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ-மாணவிகளுக்கு பெருமித செல்வி, பெருமித செல்வன் எனும் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.