தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்-தள்ளு முள்ளு


தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்-தள்ளு முள்ளு
x

தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராடிய 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராடிய 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாணவர் சங்க தலைவரிடம் சோதனை

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கடந்த 24-ந் தேதி 13-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டம் பெறுபவர்களில் ஒருவராக தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.பில். முடித்தவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவருமான அரவிந்தசாமி விழா அரங்கில் அமர்ந்து இருந்தார்.

அவர் கருப்பு சட்டை அணிந்து இருந்தார். பட்டம் பெறும் மாணவர் என்ற போர்வையில் கவர்னருக்கு எதிராக கோஷமிட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அளித்த ரகசிய தகவலின்பேரில் போலீசார், விழா அரங்கில் இருந்து அரவிந்தசாமியை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கவர்னருக்கு எதிராக காட்டுவதற்கு கருப்பு கொடி ஏதும் வைத்து இருக்கிறாரா? என சோதனை நடத்தியதுடன் விழா முடியும் வரை அவரை தனி அறையிலேயே வைத்திருந்தனர்.

போராட்டம்

தமிழக கவர்னர் விழா அரங்கை விட்டு வெளியே சென்ற பின்னரே அரவிந்தசாமி விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினரும் மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் அர்ஜூன் முன்னிலையில் தடையை மீறி தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தை நேற்று முற்றுகையிடுவதற்காக வந்தனர்.

இந்திய மாணவர் சங்க மாநில தலைவரை பட்டம் பெற விடாமல் தடுத்து, விசாரணை என்ற பெயரில் ஆடைகளை களைய செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸ்துறையை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

தள்ளு முள்ளு

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜா, நித்யா, மோகன்தாஸ், பாலாஜி, முருகேசன் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரையும் மீறி மாணவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு, அதன் மீது ஏறி குதித்தும் டி.ஐ.ஜி. அலுவலகத்தை நோக்கி ஓடினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசாருக்கு எதிராக கோஷம்

மாணவர்கள் பலர் போலீசாரின் தடுப்புகளை மீறி நேரடியாக டி.ஐ.ஜி. அலுவலக வாசலை நோக்கி சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தியதால் அலுவலக வாசல் முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

36 பேர் கைது

இதையடுத்து மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றியபோது பலர் ஏறாமல் தரையில் படுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றினர். தள்ளு முள்ளு ஏற்பட்டபோது பெண் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story