விருத்தாசலம் செராமிக் கல்லூரி முன்பு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் செராமிக் கல்லூரி முன்பு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் உள்ள செராமிக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியன சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.
விருத்தாசலத்தில் உள்ள அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கான சேர்க்கையை உடனடியாக தொடங்கிட வேண்டும். தமிழகத்தின் ஒரே கல்லூரியாக இருக்கும் இந்த கல்லூரியை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன், இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணன், குமரவேல், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாவட்ட தலைவர் செம்மலர், வட்ட பொருளாளர் செல்வகுமார், வட்ட தலைவர் சிவானந்த், வட்ட துணை செயலாளர் வீரா, கல்லூரி தலைவர் வினோதினி, வட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.