உலக சாதனை நிகழ்த்திய மதுரை வீரன் சிலம்பாட்ட தற்காப்பு கலைக்கூட மாணவர்கள்
மதுரை வீரன் சிலம்பாட்ட தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தினர்.
திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் முப்பெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் 23 மணி நேரம் 23 நிமிடம் 23 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வைத்தியநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுரை வீரன் சிலம்பாட்ட தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த 33 மாணவ-மாணவிகள், அதன் ஆசான் மணிகண்டன் தலைமையில் பங்கேற்று சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளியின் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு திருச்சி கோவிந்தசாமி தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த உலக சாதனை நிகழ்வினை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி நேரில் பார்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார். மேலும் இந்த சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. உலக சாதனை நிகழ்த்திய மதுரை வீரன் சிலம்பாட்ட தற்காப்பு கலைக்கூடத்தின் மாணவ-மாணவிகளை, அதன் மூத்த ஆசான்கள் பெரியசாமி, ராஜேந்திரன், ராமசாமி பாராட்டியதோடு, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.