படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
கூடுதல் பஸ்கள் இயக்காததால் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு,
கல்வராயன்மலை அடிவாரப்பகுதியான மூலக்காடு, புதுப்பட்டு, புதூர், லக்கிநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் அரசு பஸ் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை தவிர விவசாயிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அதில்தான் பயணம் செய்வதால், அந்த பஸ்சில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் வேறு வழியின்றி பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
நடவடிக்கை
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சில நேரங்களில் பஸ் கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கள்ளக்குறிச்சியில் இருந்து சேராப்பட்டு பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க கோரி பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேராப்பட்டுக்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.