அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்
கரூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருவதால் கணினி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.31 சதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 600-க்கு தாங்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து அடுத்த கட்டமாக உயர் கல்வி என்ன படிப்பது என்பது தொடர்பாக மாணவ-மாணவிகள் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.
ஒரு சிலர் என்ஜினீயரிங், மருத்துவம் படிப்பை முன்கூட்டியே அதற்காக தங்களை தயார் செய்து தேர்வும் எழுதினர். மேலும் கரூர் மாவட்டத்தில் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
இந்நிலையில் மருத்துவம், என்ஜினீயரிங் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளை உயர்கல்வியில் கற்க மாணவ-மாணவிகள் பலர் திட்டமிட்டு அதற்கான முயற்சியில் முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர்.
கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர ஆன்லைனில் மூலமாக விண்ணப்பம் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதற்கான அவகாசம் வருகிற 19-ந்தேதி வரை உள்ளது. இதேபோல் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஜூன் 4-ந்தேதி வரை உள்ளது.
கூட்டம் அதிகம்
கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, தரகம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். இதில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர மாணவ-மாணவிகள் மத்தியில் அதிக ஆர்வவம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதனால் கரூர் மாவட்டத்தில் கணினி மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்படும் இடங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. விண்ணப்ப கட்டணத்துடன் பதிவிற்கான கட்டணத்தையும் தனியாக வசூலிக்கின்றனர். மாணவர்களும் தாங்கள் விரும்பிய அரசு கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கின்றனர். மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். வருகிற 25-ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.