கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்


கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
x

கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

மாணவர்களும் பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப் பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை.

இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர்.

இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

அரசு கல்லூரியை விரும்பும் மாணவர்கள்

சிவகாசி அரசு கல்லூரி முதல்வர் தாமோதரன்:-

சிவகாசி அரசு கல்லூரி தற்போது 10-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இங்கு 12 பாடப்பிரிவுகள் உள்ளன. அரசு 620 மாணவ, மாணவிகள் படிக்க இடம் ஒதுக்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த ஆண்டு 580 தகுதி உள்ள மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த கட்டமாக காலியாக உள்ள இடங்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது வரை 620 இடங்களுக்கு 4,534 விண்ணப்பங்கள் வந்துள்ளது. தகுதி அடிப்படையில் மட்டுமே இடம் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி அரசு கல்லூரியில் படிக்க மாவட்டம் முழுவதும் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். அடுத்து வரும் கல்வி ஆண்டுகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இன்னும் சில பாடப்பிரிவுகள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் கலைக்கல்லூரியில் அதுவும் அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழ் பாடம்

திருச்சுழி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கூறுகையில்,

திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி சென்ற ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி முழுவதும் கிராமங்களாகும். கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் அரசு கலைக்கல்லூரியை நாடிவருகின்றனர்.

திருச்சுழி அரசு கலைக்கல்லூரியில் 5 பாடப்பிரிவுகள் உள்ளது. இதில் தமிழ் பாடத்திற்கு மட்டும் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். தற்போது முதல் கட்டமாக சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் 2-வது கட்ட சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரியில் பயில கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேர் வருகின்றனர்.

அதிகரிக்கும் ஆர்வம்

ராஜபாளையம் கல்லூரி பேராசிரியை ஸ்ரீ லட்சுமி:- இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். இ்ந்த துறைகளில் தங்கள் அறிவையும், புரிதலையும் மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். வேலை வாய்ப்பு அதிகமாக இருப்பதால் மாணவர்கள் கலைக்கல்லூரிகளை நாடி செல்கின்றனர்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அறிவுசார் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வளர்க்கும் சூழலை வழங்குகின்றன. கலை கல்லூரிகள் பெரும்பாலும் துடிப்பான கலாசார மற்றும் சமூகத்தை வளர்க்கின்றன. கலைக்கல்லூரிகளில் மாணவர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாற்றம் ஏற்படும்

விருதுநகரை சேர்ந்த கல்வியாளரும், டாக்டருமான பதினெட்டாம்படியான்:-

தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்து அரசு தேர்வுகளை எழுதி வேலை வாய்ப்பு பெறும் எண்ணத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

அதிலும் தொழில் முனைவோர் மற்றும் வணிகம் செய்வோரின் குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தொழில் தொடங்கலாம் அல்லது வணிகத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் வருகின்றனர். பி.காம் படித்தவர்கள் அனைவரும் சி.ஏ. படித்து விடவில்லை. அவர்கள் அனைவருக்கும் வங்கி வேலையும் கிடைத்துவிடாது. வெளிநாடுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி கல்வியோடு நிறுத்தி விடுகின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த துறையில் மேல் படிப்பை தொடர ஏற்பாடு செய்கின்றனர்.

நமது நாட்டில் இதுபற்றி புரிதல் இல்லாத நிலையில் பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தை பட்டப்படிப்பு முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு படையெடுக்கின்றனர். ஆனால் காலப்போக்கில் இதிலும் மாற்றம் ஏற்படுவது என்பது உறுதி.

தொழில்முனைவோர்

பேராசிரியர் ராஜா:-

கலை, அறிவியல் கல்லூரிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது நோக்கமே பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் தான். அதிலும் பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு முடிக்க வைத்து விட்டால் அவர்கள் வீட்டிலிருந்து டியூஷன் சொல்லிக் கொடுப்பது போன்ற ஏற்பாடுகளால் சம்பாதிக்க முடியும் என பெற்றோர் நினைக்கின்றனர்.

திருமண ஏற்பாடுகளை எளிதில் செய்து விடலாம் என்ற எண்ணத்திலும் பெற்றோர் அவர்களை கலை, அறிவியல் கல்லூரிக்கு அனுப்புகின்றனர். ஆனால் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. இதனால் வேலை வாய்ப்பு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆதலால் மாணவர்கள் தொழில் முனைவோராக உருவாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்பு

ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா:-

கலைக்கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்வது பி.காம் படிப்பை தான். மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் அறிவியல் படித்தால் தான் வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது.

ஆதலால் தான் கலைக்கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது.

உதவித்தொகை

தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி:-

தமிழ் வழி கல்வியில் படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு கலைக்கல்லூரிக்கு செல்கின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் கலைக்கல்லூரி படித்தால் தான் தொடர்ந்து படிக்க முடியும் என்ற நோக்கத்தில் கலைக்கல்லூரியை தேர்வு செய்கின்றனர். தற்போது பி.காம் பாடப்பிரிவை தான் நிறைய மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

பொருளாதார ரீதியாக கல்வியில் தடை ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கலைக்கல்லூரியை தேர்வு செய்து அரசு வழங்கும் உதவித்தொகையை பெற்று கல்வி பயில்கின்றனர்.

மருத்துவம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவி வர்ஷினி:-

நான் தற்போது பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரிக்கு செல்ல உள்ளேன்.

ெபரும்பாலான மாணவர்கள் கலைக்கல்லூரியை விரும்பினாலும் அரசு கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்கள், கட்டிட வசதி இல்லாதது ஆகிய காரணங்களால் சேர விரும்புவதில்லை. என்ஜினீயர், மருத்துவம் ஆகியவற்றில் செலவிடும் தொகையை விட கலைக்கல்லூரியில் செலவு குறைவு என்பதால் ஒரு சில மாணவர்கள் கலைக்கல்லூரியை தான் தேர்வு செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கலைக்கல்லூரியை தேர்வு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

உட்பிரிவுகள்

சேத்தூரைச் சேர்ந்த மாணவர் சேதுராமன்:- பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் பிரிவில் சேர்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர். என்ஜினீயர் பாடப்பிரிவில் சேர்வதை விட கலை பிரிவில் சேர்பவர்களே அதிகம். ஏனெனில் இன்று கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏராளமான பாட உட்பிரிவுகள் உள்ளன.

அவற்றில் பிடித்த பாடப்பிரிவில் சேர்ந்து மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்கின்றனர். இளங்கலை படித்து முடித்து முதுகலையில் தங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது.

கல்வி கட்டணம்

கீழ செல்லையாபுரத்தை சேர்ந்த சுந்தரமூா்த்தி:-

அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். மேலும் அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆசிரியர்கள் இருப்பார்கள். காலி இடங்கள் இருக்க வாய்ப்பில்லை. கல்வி கட்டணமும் மிக குறைவு ஆகும்.

விடுதி வசதியும் உள்ளதால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியாக உள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதியும் கிடைக்கும். ஆனால் அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்து பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. முழுமையாக தெரிந்தால் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும். கிராமப்புற மாணவர்களின் தேர்வு கலைக்கல்லூரி தான்.

பொறியியல் படிப்பு

அருப்புக்கோட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியை தங்க ரதி:-

பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு கலைக்கல்லூரிகளை நாடுவதில்லை. தனியார் கலை கல்லூரிகளை நாடி செல்கின்றனர். ஏழை மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே அரசு கலைக்கல்லூரிக்கு செல்கின்றனர்.

அரசு கலைக்கல்லூரியில் சேரும் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து தான் உள்ளது. தற்போது பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 மடங்கு மாணவர்கள்

கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியான நிலையில், அன்றிலிருந்து மே 19-ந்தேதி வரை கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த மாதம் 5-ந் தேதியில் இருந்து கடந்த 4-ந் தேதி வரை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர காலஅவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்' என்றனர்.


Next Story