மாணவி மரணம்: விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சியில் கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. அவர் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தநிலையில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், கள்ளக்குறிச்சியில் கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கனியாமூர் வன்முறையில் காவல் துறை சரக துணைத் தலைவர் காயமடைந்திருப்பதும் கவலையளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நிலைமையை இந்த அளவுக்கு மோசமாக்கிய காவல் துறையினர் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல முடியாத வேறு காரணங்களால் மாணவி மர்மமான முறையில் இறந்துவிட்டதாக பெற்றோரும் கூறி வந்தனர்.
கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது. போராட்டத்தின் போது காவல் துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியிருக்கின்றனர்.
காவல் துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீச்சில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் காயமடைந்திருக்கிறார். 20 க்கும் அதிகமான காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். காவல் துறையினர் தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்ட வர முடியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுகிறது.
சின்னசேலத்தில் நிகழும் அனைத்து கலவரங்களுக்கும் காவல் துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறு இல்லை என்று தெரிய வந்திருந்தால் உண்மையை பெற்றோரிடம் விளக்கி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இதை செய்ய காவல் துறை தவறிவிட்டது.
சின்னசேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. வெளியூரிலிருந்து திட்டமிட்டு வந்தவர்கள் தான் கலவரத்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த உண்மையை காவல் துறையும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அறிந்து காவல் துறை தடுத்திருக்க வேண்டும். பின்னணியில் இருந்து கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்" என்று அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.