பிளஸ்-2 தேர்வில் தோல்வி; 2 மாணவர்கள் தற்கொலை விஷம் குடித்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். விஷம் குடித்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள செங்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அமலோபர்ராஜ் மகன் ஜோமன்ராஜ் (வயது 17). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பிரிவில் படித்தார்.
இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவர் ஜோமன்ராஜ், வணிக கணிதம் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜோமன்ராஜ் நேற்று பிற்பகலில் வீட்டில் யாரும் இல்லாதபோது நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் விரைந்து சென்று ஜோமன்ராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி சாவு
மேல்மலையனூர் அருகே வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன்(45). விவசாயி. இவருடைய மகள் சத்யாவதி (17). தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சத்யாவதி தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த சத்யாவதி தனது பாட்டி வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்தும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
செஞ்சியை அடுத்த பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் கிஷோர் (17). செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கிஷோர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த கிஷோர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.