கல்வி உதவித்தொகை பெற மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
கல்வி உதவித்தொகை
இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ -மாணவிகள் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
மாணவ -மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ -மாணவிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கல்வி நிறுவனங்கள்
மேலும் மேற்படி நிதி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவ -மாணவிகள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையாளர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.