அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்
அரசு இசைப்பள்ளி
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களும் முறையான இசைக்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் அயல்நாடு மற்றும் நமது நாட்டிலும் இசை, நடனத்திற்கென ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளும் அனைத்து மாவட்ட மக்களுக்கும் சரிசமமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மாவட்டந்தோறும் இசைப்பள்ளிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
இப்பள்ளிகளில் ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மாணவர்கள் இசை, நடனம் ஆகியவற்றை முறையான வழியில் தகுதியான ஆசிரியர்களிடம் பயிலுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர்.
மாணவர் சேர்க்கை
இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை வருகிற 7-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவுகளில் சேர்வதற்கு வயது வரம்பு 12 வயது முதல் 25 வயது வரைஆகும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேர கல்வி தகுதி 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முடிந்தவுடன் அரசுத்தேர்வு நடத்தப்பட்டு அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும், இது சுய வேலைவாய்ப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் கல்வியாகும்.
இதில் ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைஆகும். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை திங்கள்தோறும் ரூ.400 வழங்கப்படும். இலவச பஸ் சலுகை, குறைந்த கட்டணத்தில் ரெயில் பயணச்சலுகை, இலவச பாடப்புத்தகம், அரசு விதிக்குட்பட்ட சலுகைகள் ஆகியவை வழங்கப்படும். எனவே விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டுத்திடல், விழுப்புரம், தொலைபேசி எண்:- 04146-220178, 94444 55750 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.