ஈரோட்டில் விடுமுறைக்காக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு அவல்பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை சுமார் 2 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.
பள்ளி அலுவலகப்பணியாளர் பள்ளிக்கூடத்துக்கு வந்த மின்னஞ்சல்களை கணினியில் பார்த்தார். அப்போது ஒரு மெயில், "திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்" என்ற மிரட்டல் இருந்தது. அதைப்படித்த பணியாளர் பதற்றத்துடன் விரைந்து சென்று பள்ளி முதல்வரிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தகவல் பள்ளியில் அனைத்து வகுப்பு ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் அனைவரும் திறந்தவெளி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த விவரம் ஈரோடு மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஈரோடு மாவட்ட போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக 'மெட்டல் டிடக்டர்' கருவி மூலம் சோதனை செய்தனர். மாலை வரை அவர்கள் முழுமையான சோதனை நடத்தினர். திருப்பூரில் இருந்து மோப்பநாய் படைப்பிரிவினரும் பள்ளிக்கூடத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை முழுமையாக நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த இரு மாணவர்கள் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து போலீசார், பள்ளி நிர்வாகத்தினர் அறிவுரை கூறினர். மீண்டும் இதேபோல் செயல்பட்டால் வழக்குப்பதியப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.